உள்ளூர் செய்திகள்

3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி மறியல்

Published On 2023-04-12 07:52 GMT   |   Update On 2023-04-12 07:52 GMT
  • ஆவுடையார்கோவிலில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் 3 பேரை கைது செய்ய கோரி மறியல் போராட்டம
  • 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (வயது 39), ஸ்ரீராம்தீபக் (30), சந்தனபிச்சை (46). இவர்கள் 3 பேரும் சமீப காலமாக அடிதடி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே வந்த பழனி உள்ளிட்ட 3 பேர் காரணமின்றி மாணிக்கத்தை அடித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட உறவினர்கள், பொதுமக்கள், இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது என்று கூறி ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்து 18 நாட்களை கடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்த்துறையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார், வட்டாட்சியர் மார்டின் லூதர்கிங் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் கூறுகையில் குற்றவாளிகள் 3 பேரும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தெருவில் நடந்து செல்பவர்களை கூட வீண் வம்பு இழுத்து கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 5 நாட்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News