புளியரை-கோட்டைவாசல் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை
- புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
- சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ளது கோட்டைவாசல்.
தமிழக எல்லைப்பகுதி
இது தமிழகத்தின் எல்லைப் பகுதியாக உள்ளது. தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய பகுதியான இது திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இதன் அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
பழுதான சாலை
மேலும்அரசு பஸ்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள். இதனால் இந்தச்சாலை இரவு பகலாக எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையான புளியரை முதல் கோட்டை வாசல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
பெரும் பாலான இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அதில் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உருவாக்கி உள்ளது.
இரவு நேரங்களில் அந்தச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.