மேலப்பாளையம்-ரெட்டியார்பட்டி சாலையில் பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீரோடை பணியால் தேங்கும் மழைநீர்
- பல்வேறு போரட்டங்கள் நடத்தியதன் விளைவாக கழிவு நீரோடை அமைக்கும் பணி நடைபெற்றது.
- மழைநீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்ட லத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு ரெட்டியார்பட்டி சாலையில் ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் இடுப்பளவு தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளாக இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு போரட்டங்கள் நடத்தியதன் விளைவாக ரூ. 95 லட்சம் மதிப்பில் கழிவு நீரோடை அமைக்கும் பணி நடைபெற்றது. அல் மதினா பள்ளிக்கூடம் முதல் நடை பெற்று வந்த பணி தாய்நகர் கடைசியில் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் காரணமாக திடீரென ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் கரீம் நகர், தாய்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கழிவு நீரோடை முழுவதும் தண்ணீரால் நிரம்பி சாலை எது, ஓடை எது என தெரியாத நிலை உள்ளது. இதன் காரணமாக ரெட்டியார்பட்டி சாலை ஓடையில் வாகனங்கள் சிக்கி சிரமப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் இரு கரைகளிலும் செம்மண் கொண்டு நிரப்பப்படாததால் சாலையும் சேதம் அடைந்து உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கழிவு நீரோடை அமைத்தும், அது முழுமை பெறாததால் அரசின் நிதி வீணாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் டவுன் குற்றாலம் சாலையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கழிவு நீரோடை மற்றும் எஸ்.என். ஹைரோடு 2 பக்கங்களிலும் அமைக்கப்பட்ட கழிவு நீரோடையும், திட்டமிட்டு கட்டப்படாததால் பொது மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்பட்டது என புகார் எழுந்தது.
எனவே மாநகராட்சி கமிஷனர் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை போர்க்கால அடிப்படையில் இடித்து மீதமுள்ள கழிவு நீர் ஓடையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.