உள்ளூர் செய்திகள்

தமிழை காக்க ஊர் கூடி பாடுபடுவோம்- ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2023-04-23 09:53 GMT   |   Update On 2023-04-23 09:53 GMT
  • தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கங்கள் விரிவானவை.
  • குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழை வளர்ப்பதாக இருந்தாலும், சிதைவிலிருந்து மீட்பதாக இருந்தாலும், தமிழில் தேவைக்கு ஏற்ற புதிய சொற்களை கண்டறிவதாக இருந்தாலும் அது தனிமனிதர்களால் மட்டுமே சாத்தியமாகும் செயல் அல்ல. இந்தப் பணிகளை குழுவாக செய்யும்போது அவை வேகம் பெறும். அதுவே இப்பணிகளை இயக்கமாக மாற்றும்போது, அதன் முன்னேற்றம் புயலை விட அதிக வேகம் கொண்டதாக இருக்கும்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் ஓரளவுக்காவது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன என்றால் அதற்கு காரணம் பா.ம.க சார்பிலும், தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான்.

தமிழைத்தேடி இயக்கத்தின் நோக்கங்கள் விரிவானவை. கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுதுவதில் தொடங்கி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பயிற்றுமொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்பது வரை எண்ணற்ற மாற்றங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது.

மாவட்ட அளவில் குறைந்தது 10 பேர் கொண்ட குழுக்களை அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடி, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளையும், பரப்புரைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக தமிழைத் தேடி இயக்கம் வடிவமைத்து வெளியிட்டுள்ள தனித்தமிழ் சொற்கள் அறிவோம், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் ஆகிய பதாகைகளை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, நீங்கள் பணி செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தனித்தமிழிலேயே உரையாடுங்கள். ஊர்கூடித் தான் தேர் இழுக்க வேண்டும். எனவே, தமிழறி ஞர்களே, தமிழ் உணர்வாளர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் ஆசிரியர்களே வாருங்கள்... ஒன்றாக கைக்கோர்ப்போம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை விரைவில் உருவாக்குவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News