ராமநதி- ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணி:இந்த வார இறுதிக்குள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்- வனத்துறை இணை இயக்குனர் கூறியதாக சிவபத்மநாதன் தகவல்
- இந்த திட்டம் சம்பந்தமாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
- வனத்துறை துணை இயக்குனருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணி சம்பந்தமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்பிரியாவை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து திட்டம் குறித்து விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவ பத்மநாதன் கூறியதாவது:-
கடந்த ஆட்சி காலத்தில் முறையாக வனத்துறையிடம் அனுமதி பெறாமல் திட்டத்தை தொடங்கியதால் ஏற்பட்ட குழப்பங்கள் சம்பந்தமாக கடந்த ஒரு வருட காலமாக நானும்(சிவ பத்மநாதன்), ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டு குழு தலைவர் உதயசூரியனும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், அதிகாரி களையும் சந்தித்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மத்தியஅரசு அனுமதி பெற்ற உடன் திட்டம் நிறைவேறும் என்று அறிவித்தார்.
ஏற்கனவே இந்த திட்டம் சம்பந்தமாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வனத்துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கையை வைத்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதன் பிறகு தமிழக அரசால் கால்வாய் வெட்டுவதற்கு வனத்துறை அனுமதி வழங்கப்பட்டு மத்திய அரசு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற வனத்துறை அலுவலகத்தில் இருந்து சில கூடுதல் தகவல்கள் கேட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கோப்பு வனத்துறை துணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
அந்த கோப்பை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்ப வலியுறுத்தி துணை இயக்குனர் செல்வ பிரியாவை வலியுறுத்தி பேசினோம். இந்த வார இறுதிக்குள் மத்திய அரசிற்கு பரிந்துரைக்கப் பட வேண்டிய கோப்புகளை அனுப்பி விடுவோம் என்று துணை இயக்குனர் கூறினார்.
அதனை தொடர்ந்து மத்திய அரசு வன குழுவில் நடைபெறுகிற வனக் குழு ஆய்வு கூட்டத்தில் இந்த திட்டம் சம்பந்தமாக விவா தித்து அனுமதிக்கப்பட்ட பின்னர் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அப்போது நாகல்குளம் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், தொண்டரணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்