குடும்ப அட்டைதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம்
- 79 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, கடந்த 18 -ந்தேதி முதல் 20-ந் தேதி வரை இரண்டாம் கட்டமாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி விடுபட்டுப் போனவர்கள், அரசு அறிவிப்பின்படி முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுபவர்கள் உள்ளிட்டோரும் விண்ணப்பித்தனர்.
இதன் அடிப்படையில் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4,02,617 குடும்ப அட்டைகளில், 3,18,045 குடும்ப அட்டைதார்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது 79 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது. அதன்பின் தேவைப்படும் விண்ணப் பங்கள் மட்டும் அரசு அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளன.
கிராமப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவ லர்கள், கிராம வருவாய் உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களும், நகர் பகுதிகளில் பில் கலெக்டர்களும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை, ராமேசுவரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 9 தாலுகாக்களில் கள ஆய்வில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 775 ரேஷன் கடைகளுக்கு தலா ஒருவர் வீதம் 775 கள ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.