உள்ளூர் செய்திகள்

மகளிர் பணிபுரியும் நிறுவனங்களில் நிறுவுவதற்காக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸிடம் அமைச்சர் கீதாஜீவன் பாதுகாப்பு பெட்டிகளை வழங்கினார். அருகில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளார்.

போதைப்பழக்கத்தின் தீமைகள்குறித்து விழிப்புணர்வு

Published On 2022-08-19 09:09 GMT   |   Update On 2022-08-19 09:09 GMT
  • போதைப்பழக்கத்தின் தீமைகள், குழந்தைகள் உதவி எண் குறித்து அமைச்சர் கீதாஜீவன் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
  • மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, மகளிர் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி நிறுவுதல் நிகழ்ச்சி மற்றும் உள்ளக புகார் குழு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து, மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்தது.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்டவற்றை அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

பின்னா் அமைச்சா் கூறியதாவது:-

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறியாமல் பேசிவருகிறாா். அவருக்கு நடைமுறை தெரியவில்லை. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு சூழ்நிலையை உறுதிப்படுத்த முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சமூநலத்துறை முறைப்படுத்தப்பட்டு திட்டங்கள் செயல்ப–டுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடங்களுக்குப் பதிலாக 1000 புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த கட்டிடங்கள் கட்டப்படும். ராமநாதபுரம் வளரும் பட்டியலில் உள்ளதால் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், அரசுப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதுவரை இந்த திட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.181 மற்றும் 1098 அழைப்பதன் மூலம் அழைத்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைப்பதால் இது போன்ற அழைப்புகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது.

2015 முதல் 2020 வரை 15 ஆயிரம் அழைப்புகளும், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 16ஆயிரம் அழைப்புகளும் வந்துள்ளன. அனைத்து பள்ளிகளிலும் போதைப் பழக்கத்தின் தீமைகள், கல்வியின் அவசியம், குழந்தைகள் உதவி எண் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை திட்ட அலுவலர் விஷ்வாபதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன், கீழக்கரை தி.மு.க.செயலாளர் பஷீர் அகமது, மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர் சுகைபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News