தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் நவீன வசதி
- தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் நவீன வசதிகளுடன் பாடம் நடத்தப்பட்டது.
- நடத்தும் பாடங்களை கவனச்சிதறல் இல்லாமல் அனைத்து மாணவ, மாணவிகளுமே கவனித்து பாடத்தை கற்றுக்கொள்கின்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் புரொஜக்டர் மூலம் ஒளிபரப்பி திரையில் பாடங்கள் நடத்தப்பட்டது. இப்பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்விச்சீர் வழங்கும் விழாவில் மக்கள் சட்ட பாதுகாப்பு அமைப்பினர் புரொஜக்டர் வழங்கினர். அதில் பள்ளி தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி பாடங்களை நடத்தினார்.
இது குறித்து தலைமை ஆசிரியை சாந்தி கூறும்போது, புரொஜக்டரில் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு ஒளி மற்றும் ஒலியுடன் படத்துடன் காட்சிப்படுத்தும் வசதி உள்ளது. இதனால் பாடம் மாணவர்கள் மனதில் எளிதாக பதிவாகிறது. கரும்பலகையில் நடத்துவதைவிட இதில் நடத்தும் பாடங்களை கவனச்சிதறல் இல்லாமல் அனைத்து மாணவ, மாணவிகளுமே கவனித்து பாடத்தை கற்றுக்கொள்கின்றனர். மேலும் கற்பித்தலில் புதிய முயற்சியாக இது உள்ளது என்றார்.