உள்ளூர் செய்திகள்

ரெயிலில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை உரியவர்களிடம் ராமநாதபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ், போலீஸ்காரர் ஜலாலுதீன் ஆகியோர் ஒப்படைத்தனர்.

ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டனர்

Published On 2023-01-16 08:10 GMT   |   Update On 2023-01-16 08:10 GMT
  • ரெயிலில் மறந்து வைத்துச் சென்ற ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
  • போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் அலங்கானூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராமச்சந்திரன் (வயது 70).இவர் பெரம்பலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் மனைவி முத்துலட்சுமியுடன் (60) நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். இன்று காலை 6 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்ததும் மனைவியுடன் இறங்கி விட்டார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமக்குடி ரெயில் நிலைய அதிகாரி யிடம் தகவல் தெரிவித்தார். அவர் ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ், போலீஸ்காரர் ஜலாலுதீன் ஆகியோர் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் ஏறி பார்த்தபோது கைப்பை அங்கு இருந்தது. அதை திறந்து பார்த்த போது ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவையும் பத்திரமாக இருந்தன.

இது குறித்து ராமநாதபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பரமக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமு மனைவியுடன் ராமநாத புரம் வந்தார். ெரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன் ராஜ், போலீஸ்காரர் ஜலாலு தீன் ஆகியோரிடம் நன்றி தெரிவித்து கைப்பையை பெற்று சென்றனர்.

போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News