உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்- கலெக்டர் தகவல்

Published On 2022-07-17 09:44 GMT   |   Update On 2022-07-17 09:44 GMT
  • நீர்வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றங்கரையோரத்தில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காவிரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

நீர்வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கால்வாய்கள் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் அதிகம் திறந்து விடப்பட வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். பாலங்களைத் தவிர கடந்து செல்லும் இதர பாதைகள் ஏதும் இருப்பின் அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News