உள்ளூர் செய்திகள்

கனமழை- மின் தடையால் மக்கள் தவிப்பு

Published On 2024-08-31 04:45 GMT   |   Update On 2024-08-31 04:45 GMT
  • பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
  • சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

குறிப்பாக ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு சூறாவளிகாற்றுடன் லேசான மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆத்தூர் உடையார் பாளையம் சாலையில் இரும்பு கம்பிகள் மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. தொடர்ந்து அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது.

வாழப்பாடியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் மின் கம்பிகள் மீது பனை மரம் சாய்ந்தது. அந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் மக்கள் தவியாய் தவித்தனர்.

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசி நாயக்கன்பட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரங்கள் மின் கம்பங்கள் மீது சாய்ந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இதே போல மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியில் அரூர் நெடுஞ்சாலையிலும் புளிய மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தது . இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இரவு மின் தடை ஏற்பட்டதால் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர்.

ஏற்காட்டில் நேற்று 7 மணிக்கு தொடங்கிய மழை இரவு 9 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சேலம் மாநகரில் நேற்று இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை மழை பெய்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களில் நனைந்தபடியே சாலைகளில் சென்றனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்ககிரியில் 30 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காட்டில் 27.8 மி.மீ. , சேலம் மாநகர் 7, வாழப்பாடி 22, ஆனைமடுவு 1, ஆத்தூர் 4.2, ஏத்தாப்பூர் 4, கரியகோவில் 10, வீரகனூர் 5, நத்தக்கரை 19, சங்ககிரி 30, எடப்பாடடி 6.4, மேட்டூர் 16.4, ஓமலூர் 7, டேனீஸ்பேட்டை 12 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 171.8 மி.மீ. மழை பெய்தது.

Tags:    

Similar News