கொங்கணாபுரத்தில் தேங்காய் கொப்பறை விற்பனை அதிகரிப்பு
- வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
- நிலக்கடலைக்கான பொது ஏலத்தில் ரூ.78 ஆயிரத்து 398 மதிப்பிலான நிலக்கடலை விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் நிலக்கடலை குறைந்தபட்சமாக ரூ.2,728 முதல் அதிகபட்சமாக ரூ.4,415 வரை விற்பனையானது
எடப்பாடி:
சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில், கொங்கணா புரத்தை அடுத்த கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும், தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பருத்தி, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று இம்மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 145 மூட்டை தேங்காய் கொப்பரைகள் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் ரக தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.7,880 முதல் 8,255 வரை விலைபோனது. இதேபோல் இரண்டாம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,085 முதல் ரூ.7,381 வரை விலைபோனது, ஏலத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.
தொடர்ந்து நடைபெற்ற நிலக்கடலைக்கான பொது ஏலத்தில் ரூ.78 ஆயிரத்து 398 மதிப்பிலான நிலக்கடலை விற்பனை நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் நிலக்கடலை குறைந்தபட்சமாக ரூ.2,728 முதல் அதிகபட்சமாக ரூ.4,415 வரை விற்பனையானது. தற்போது இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தொடங்கி உள்ளதால், வரும் நாட்களில் இம்மையத்தில் நிலக்கடலை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.