உள்ளூர் செய்திகள்

வைகாசி விசாக திருவிழா கோலாகலம் சேலத்தில் சுகவனேஸ்வரர், அழகிரிநாதர் கோவில் தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2023-05-31 09:16 GMT   |   Update On 2023-05-31 09:16 GMT
  • சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன.
  • கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

சேலம்:

சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவின்போது 2 நாட்கள் தேரோட்டம் நடத்தப்படும். முதல் நாளில் சுகவனேஸ்வரர் தேரும், 2-வது நாளில் பெருமாள் தேரும் வலம் வரும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா 2 கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் போற்றப்பட்ட சுகனவனேஸ்வரர் கோவில், அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடப்பட்ட தலமாகும். இந்த கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த ரதவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 25-ந்தேதி கொடியேற்றமும், தொடர்ந்து காலை மாலை சாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள்கிறார். பின்பு 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். 5 ஆண்டுக்கு பின்னர் இந்த தேரோட்டம் நடப்பதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில் வைகாசி விசாக உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தேர்வீதிக்கு சாமி எழுந்தருள்கிறார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடக்கிறது. பின்பு தேரோட்டம் தொடங்குகிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ராஜகணபதி கோவில் பகுதியிலிருந்து புறப்படும் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ராஜகணபதி கோவில் அருகே நிலை சேர்கிறது.

அடுத்தடுத்து 2 நாட்கள் தேரோட்டம் நிகழ்வதால் சேலம் மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது. 2 கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. தற்காலிக கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன. 2 தேர்களையும் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

தேரோட்டத்தை முன்னிட்டு சேலம் கடைவீதி தேரடியில் தொடங்கி ஆனந்தா இறக்கம், லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், 2-வது அக்ரஹாரம், வரதராஜபெருமாள் கோவில்(பட்டைக்கோயில் ), சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் இறக்கம், முதல் அக்ரஹாரம் மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் 2, 3-ந்தேதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்த்திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News