சமுதாய கூடம், மயானம் அமைக்க கேட்டு மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
- உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
சேலம்:
சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் சமுதாயக்கூடம் மற்றும் மயானம் கேட்டு இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
அரசு நிலம்
சேலம் அயோத்தியா பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுர் பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதி மக்களுக்கு சமுதாய கூடமும், மயானமும் அமைத்து தர பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
எனவே எங்களது நீண்ட நாள் கோரிக்கையான மயானமும், சமுதாய கூடமும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசு பள்ளிக்கு
கூடுதல் வகுப்பறை
சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-கொண்டப்ப நாயக்கன்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் 730 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் போதிய கட்டிட வசதி, கழிவறை வசதி இல்லை. நூலகம், ஆய்வகம், கணினி அறைகளை வகுப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வரண்டாவில் அமர்ந்து கற்கும் நிலையும் உள்ளது. உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது சம்பந்தமாக பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வகுப்பறைக்கு போதுமான கட்டிடம் கட்டுவதுடன் கழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.
மேலும் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.