உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெறலாம்-அதிகாரி தகவல்

Published On 2023-07-11 07:42 GMT   |   Update On 2023-07-11 07:42 GMT
  • இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

கிருஷ்ணகிரி,  

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ.200ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.600ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000ம் என உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை.

மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவிகளாக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் முடிவுற்ற புதுப்பித்திருப்பின் மற்றும் மாற்றுத்திறனாளி எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று காத்திருப்போர் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம்.

அதற்கான விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின், சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News