உள்ளூர் செய்திகள்

தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-05-26 08:20 GMT   |   Update On 2023-05-26 08:20 GMT
  • தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கலெக்டர் ஆஷா அஜீத் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மானாமதுரை வருவாய் கிராமங்களான அரசனேந்தல், கீழப்பசலை, கிளங்காட்டூர், அன்னவாசல், வேதியரேந்தல், தெற்கு சந்தனூர், கால்பிரவு, ராஜகம்பீரம், மானாமதுரை, அரிமண்டபம்,

எம்.கரிசல்குளம், மிளகனூர், சின்னக்கண்ணனூர், தெ.புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அதன் பயன்களை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

சிவகங்கை வட்டத்தில் 30 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 14 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 70 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 51 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 28 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 70 மனுக்களும், மானாமதுரை வட்டத்தில் 123 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 8 மனுக்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 135 மனுக்களும் என மொத்தம் 529 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

மேற்கண்ட மனுக்களின் மீது அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, உரிய களஆய்வுகள் மேற்கொண்டு ஒருவாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஆஷா அஜீத் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா(சிவகங்கை), பால்துரை(தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News