உள்ளூர் செய்திகள் (District)

பங்குனி உத்திரத்தையொட்டி மருதமலை-பேரூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-04-05 09:20 GMT   |   Update On 2023-04-05 09:20 GMT
  • மருதமலையில் 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

வடவள்ளி,

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று தொடங்கியது. இன்று அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடந்தது. அதை தொடர்ந்து பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ரத்தின அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக பல்வேறு இடங்களில் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

மதியம் 12 மணிக்கு பக்தர்களின் பிரமாண்ட பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்தார்.

மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

இன்று மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழா வையோட்டி 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்கு கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் மலைக்கு சென்றனர்.

இதேபோல பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கோவை காந்திபார்க் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.

Tags:    

Similar News