சங்கரன்கோவில் பகுதியில் கஞ்சா, போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - புதிய டி.எஸ்.பி., சுதீர் எச்சரிக்கை
- சங்கரன்கோவில் வட்டாரத்தில் போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மாணவிகளுக்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல் இருந்தால் தைரியமாக போலீசில் தெரிவிக்கலாம் என்று டி.எஸ்.பி. சுதீர் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சரக டி.எஸ்.பி., ஆக இருந்த ஜாகிர் உசேன் இடமாற்றம் செய்யப் பட்டதை தொடர்ந்து புதிய டி.எஸ்.பி., யாக சுதீர் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது டி.எஸ்.பி., சுதீர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சங்கரன்கோவில் வட்டாரத்தில் போதை பொருள் விற்பவர்கள் மீது தென் மண்டல ஐ.ஜி.யின் வழி நடத்துதலின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கந்து வட்டி கொடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஈவ் டீசிங்கில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல் இருந்தால் தைரியமாக போலீசில் தெரிவிக்கலாம். இவ்வாறு மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். ஈவ் டீசிங் குறித்து தெரிவிக்கும் மாணவிகளின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்படும். பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஏற்படும் மோதலை தடுக்க கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல் மற்றும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அது பற்றி பொதுமக்கள் எனக்கு தகவல் தெரிவிக்கலாம்.
சமூக விரோதிகள், ரவுடிகள், திருடர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சங்கரன்கோவில் பகுதியை குற்றம் இல்லா பகுதியாக மாற்ற பொது மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.