உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாணவிகளை படத்தில் காணலாம்.

விடுதி வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் மனு

Published On 2023-08-01 09:30 GMT   |   Update On 2023-08-01 09:30 GMT
  • பஸ் ஏறி கல்லூரி வருவதற்கு, 3 முதல், 4 மணி நேரம் ஆகிறது.
  • இரவு பஸ்சை தவறவிட்டால் ஆட்டோவில் செல்ல, 200 ரூபாய் ஆகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பீமகுளம், நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகில் உள்ள பனைமரியாளம், கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாங்கள் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ளோம்.

ஒவ்வொருவரும் சுமார், 60 கிலோ மீட்டர் முதல், 120 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து கிருஷ்ணகிரி கல்லூரிக்கு தினமும் வந்து செல்கிறோம். எங்கள் கிராம பகுதிகளில் இருந்து பஸ் ஏறி வருவதற்கு, 3 முதல், 4 மணி நேரம் ஆகிறது.

தினமும் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல இரவு 10 மணி ஆகிறது. மேலும் எங்கள் கிராமத்திற்கு செல்லும் இரவு பஸ்சை தவறவிட்டால் ஆட்டோவில் செல்ல, 200 ரூபாய் ஆகிறது.

எங்களுக்கு கிருஷ்ணகிரியில் விடுதி வசதி கோரி மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News