பழனி அருகே காகித ஆலையில் திடீர் தீ விபத்து
- பழனி அருகே காகித ஆலையில் பழைய பேப்பர்கள் வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
- இதில் பல கோடி மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமாயின
பழனி:
பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் தனியார் காகித ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். காகித உற்பத்திக்காக ஆலை வளாகத்தில் பழைய பேப்பர்கள் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று பழைய பேப்பர்கள் வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை. அடுத்தடுத்து மற்ற பேப்பர் வைத்திருந்த பகுதிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து உடனடியாக ஆலய நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அங்கு இருந்த பல டன் பழைய பேப்பர்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆலை நிர்வாகம் கூறுகையில், எரிந்துபோன பேப்பரின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவித்தனர்.