உள்ளூர் செய்திகள்

தனுஷ்கோடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

Published On 2023-06-12 06:02 GMT   |   Update On 2023-06-12 06:02 GMT
  • கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது
  • ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமேசுவரம்:

அண்மை காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்துவது அதிகளவில் நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 35 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது

இலங்கையில் பீடி தயாரிக்கப்படும் இலைகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. அதிக விலை போகும் இந்த இலைகள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 9 மூட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் மூட்டைகளை பிரித்து சோதனையிட்ட போது அதில் பீடி இலைகள் இருந்தன. ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக சமூக விரோதிகள் கொண்டு வந்திருக்கலாம் எனவும், ஆனால் எந்த காரணத்திற்காகவும் விட்டு சென்றார்கள் என தெரியவில்லை.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News