உள்ளூர் செய்திகள் (District)

57 வயதை 40 வயது என்று ஏமாற்றி இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த என்ஜினீயர்

Published On 2024-02-11 10:39 GMT   |   Update On 2024-02-11 10:39 GMT
  • மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
  • பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

சேலம்:

சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.

இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.

அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.

இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.

மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News