உள்ளூர் செய்திகள்

3-வது முறையாக 'சீல்' வைக்கப்பட்டு வெறிச்சோடிய அ.தி.மு.க. தலைமை கழகம்

Published On 2022-07-13 09:02 GMT   |   Update On 2022-07-13 10:26 GMT
  • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தற்போது 3-வது முறையாக கடந்த 11-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து தொண்டர்கள் வரத்து இல்லாததால் அ.தி.மு.க. தலைமை கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் எந்த கட்சிக்கும் ஏற்படாத சோதனை தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல கட்டங்களாக சோதனையை சந்தித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க. சோதனைக்கு உள்ளாகி வருகிறது.

எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். 1972 அக்டோபர் முதல் ராயப்பேட்டையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தை ஜானகிஅம்மாள் 1957-ம் ஆண்டு வாங்கினார். பின்னர் இந்த இடத்தை 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஜி.ஆருக்கு தானமாக வழங்கினார்.

அ.தி.மு.க. தலைமை கழகம் ஏற்கனவே 2 முறை சீல் வைக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக சீல் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவரது மனைவி ஜானகி அம்மாள் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அ.தி.மு.க. 2 ஆக உடைந்து ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.

இதையடுத்து 1988-ம் ஆண்டு தமிழகத்தில் ஜானகி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மேலும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜானகி தரப்பினரும், ஜெயலலிதா தரப்பினரும் உரிமை கோரினார்கள். எனவே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட சுமார் 15 மணி நேரத்தில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த சீல் வைப்பு சம்பவம் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி நடந்தது. அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டபிள்யூ.ஐ. தேவாரம் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இரு தரப்பினரும் மாறி மாறி கோர்ட்டில் வழக்குகளை சந்தித்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வந்தது. இதில் ஜானகி தலைமையிலான அணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 1989-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி இரு அணிகளும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார். இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகம் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

அதன் பிறகு 1990-ம் ஆண்டு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு 2-வது முறையாக சோதனை வந்தது. அப்போது தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் திருநாவுக்கரசர் தலைமையிலான ஒரு அணியினர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் புகுந்தனர். அப்போது அ.தி.மு.க. அலுவலகத்தில் மீண்டும் மோதல் நடந்தது. இந்த மோதல் காரணமாக 1990-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கழகத்துக்கு சீல் வைத்தது போலீசாரா? அல்லது வருவாய் துறை அதிகாரிகளா? என்ற சர்ச்சை வெடித்தது.

அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த கே.கே.ராஜசேகரன் நாயர் போலீசார் சீல் வைக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுமார் 4 மாதம் இந்த வழக்கு நடந்தது. அப்போது கட்சி அலுவலகத்தின் சாவி நீதிபதியிடம் இருந்தது. 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. தலைமை கழகத்தை கோர்ட்டு மீட்டு ஜெயலலலிதாவிடம் ஒப்படைத்தது. அப்போது ஜெயலலிதாவின் வக்கீல் சுப்பிரமணியன், நீதிபதியிடம் இருந்து சாவியை பெற்றார். 1990-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி பெங்களூரில் இருந்த ஜெயலலிதாவிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தற்போது 3-வது முறையாக கடந்த 11-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொண்டர்கள் வரத்து இல்லாததால் அ.தி.மு.க. தலைமை கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் எப்போது தீரும் என்று தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News