உள்ளூர் செய்திகள் (District)

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்

Published On 2023-02-09 08:04 GMT   |   Update On 2023-02-09 08:04 GMT
  • தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.
  • இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தனது அணி வேட்பாளர் வாபஸ் பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதே போல் குக்கர் சின்னம் கிடைக்காததால் அ.ம.மு.க.வும் போட்டியிடாது என்று டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.

இதையடுத்து நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வாபஸ் பெறுவதற்கு முன்பே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் தனது வேட்பு மனுவை நாளை வாபஸ் பெறுகிறார்.

வேட்பு மனுக்கள் நாளை மாலை 3 மணிவரை திரும்ப பெறலாம். பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், நாம் தமிழர், தே.மு.தி.க.வினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24, 25-ந் தேதிகளில் தீவிர பிரசாரம் செய்கிறார். இதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19,20-ந் தேதிகளில் பிரசாரம் செய்கிறார். கனிமொழி எம்.பி., 16-ந் தேதி பிரசாரம் செய்கிறார்.

இதே போல் எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 கட்ட பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளார். தனது முதல் கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளார். பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை தேர்தலுக்கு முந்தைய கடைசி வாரத்தில் செய்கிறார்.

பிரசாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கட்சி தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தொழில் அதிபர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் ஈரோடு மாவட்டம் அல்லது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன செய்தது. மேலும் ஓட்டு பெறுவதற்காக தி.மு.க. பல வாக்குறுதிகளை அளிக்கும். ஆனால் அவர்கள் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமாட்டார்கள் என்று எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர் சாலை ஓரம் இருந்த கடையில் டீ குடித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் ஆட்சி ஏற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் இது. இதனால் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். இதற்காக 11 அமைச்சர்கள் உட்பட 31 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டது.

தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு பிரசாரத்தை தொடங்கினர். பின்னர் தி.மு.க. சார்பில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஈரோட்டிலேயே முகாம் அமைத்து பிரசாரம் செய்து வருகிறார்கள். 4 அல்லது ஐந்து வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, காந்தி, சேகர்பாபு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், சி.வி.கணேசன், ராமச்சந்திரன், கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை கருங்கல்பாளையம் ராஜாஜி புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் அந்தப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வழிபட்டார். இது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் 30 பேர் உட்பட 121 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 10 நாட்களுக்கு முன்பே ஈரோட்டில் முகாமிட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தாமதமாக அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் பணிகளை அவர்களும் ஏற்கனவே தொடங்கி விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் தொகுதியில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கும் முன்பு அந்த பகுதியில் உள்ள கோவில்களில் சென்று வழிபட்டு பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், துணிகளுக்கு அயன் செய்தும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

இன்று காலை கருங்கல்பாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று பூ வழங்கி, கோவில் பிரசாதங்கள் கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது இன்று மாலை நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்தார்.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் ஆனந்த் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் காலை தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனும் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாமல் நேர்மையான முறையில் ஓட்டு போட வேண்டும் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News