உள்ளூர் செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ- மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

Published On 2024-01-30 09:08 GMT   |   Update On 2024-01-30 09:08 GMT
  • ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி:

தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News