உள்ளூர் செய்திகள் (District)

போலி பெண் டாக்டருக்கு உதவியதாக வழக்கு: வக்கீல் மீதான வழக்கு ரத்து

Published On 2023-08-10 10:11 GMT   |   Update On 2023-08-10 10:11 GMT
  • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது.
  • போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தொண்டியில் போலி பெண் டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு நான் உதவியதாக கூறி, அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, என்னை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் அந்த போலி டாக்டரை பாலியல் ரீதியாக நான் துன்புறுத்தியதாகவும் பொய் புகார் பெற்று வழக்குபதிவு செய்தார். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரி புகழேந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண் டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் போலீசார் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை, நிரூபிக்கவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் மனுதாரருக்கு எதிராக பதிவான முதல் தகவல் அறிக்கையிலும் வலுவான குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. எனவே மனுதாரர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News