உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2024-09-03 06:09 GMT   |   Update On 2024-09-03 06:09 GMT
  • நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது.

ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீரானது தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிகரித்த வண்ணமாக இருந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படி யாக குறைந்து நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.

இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.

இந்த நீர்வரத்து குறைந்ததால், சின்னாறு, கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News