உள்ளூர் செய்திகள்

விமல்குமார்- கோபாலகிருஷ்ணன்

கள்ளக்காதலை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்து கட்டினேன்- மனைவி பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-12-23 08:02 GMT   |   Update On 2022-12-23 08:02 GMT
  • தேவராஜ் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
  • தந்தை கொலை செய்யப்பட்டதாலும் தாய் ஜெயிலுக்கு சென்றுள்ளதால் 2 குழந்தைகளும் பரிதவித்தப்படி நிற்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தத்தை சேர்ந்த ஆரோன் மகன் தேவராஜ் என்ற தேவா (வயது 32). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் தேவா கடந்த 20-ந் தேதி இரவு மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையுண்ட தேவா செல்போன் எண்ணில் யாரெல்லாம் பேசினார்கள் என்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தேவராஜின் மனைவி சரண்யா, தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து சரண்யா மற்றும் கள்ளக்காதலன் விமல்குமார், அவருடைய நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான சரண்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு-

நானும், கணவரும், குழந்தைகளுடன் கோழிக்கால்நத்தம் பகுதியில் பெற்றோருடன் கூட்டுக்குடித்தனமாக இருந்து வந்தோம்.

இந்த நிலையில் தொழில் தொடர்பாக தேவாவுடன் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த விமல் குமார் பழகி வந்தார். இதனால் அவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். இதில் எனக்கும், விமல் குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

என்னை, அக்கா என விமல் குமார் அழைத்து வந்ததால் வீட்டில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. நாளடைவில் எங்களது கள்ளத்தொடர்பு பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால், எனது கணவர் தேவராஜன் என்னை கோழிக்கால் நத்தம் பகுதியில் தனி குடித்தனம் நடத்த அழைத்து சென்றார். அங்கு தனி குடித்தனம் நடத்தி வந்தோம்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தேவாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை நான் கண்டித்தபோது நீ வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாய், அதனால் பதிலுக்கு நானும் வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளேன் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான், விமல் குமாரை வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். எங்களது கள்ளத்தொடர்பு மீண்டும் தொடர்ந்தது.

இதனால் எனக்கும் தேவாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் நானும், விமல் குமாரும் சேர்ந்து தேவாவை தீர்த்து கட்ட முடிவு செய்து திட்டம் தீட்டினோம். விமல் குமார் தனக்கு தெரிந்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் பேசி கூலிப்படையை நியமித்தார். கூலிப்படைக்கு முதற்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்தோம்.

தேவா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்தார். அடுத்த ஆண்டு இன்சூரன்ஸ் பணம் மெச்சூரிட்டி ஆகிவிடும். தேவாவை கொலை செய்த பிறகு இந்த பணத்தை தருவதாக கூலி படையினரிடம் தெரிவித்தோம். இதையடுத்து கூலிப்படையினர் தேவாவை தீர்த்துக்கட்டினர்.

ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த என்னையும் கள்ளக்காதலனையும் கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு சரண்யா வாக்குமூலம் போலீசாரிடம் அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்செங்கோடு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

தேவராஜ் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தந்தை கொலை செய்யப்பட்டதாலும் தாய் ஜெயிலுக்கு சென்றுள்ளதால் 2குழந்தைகளும் பரிதவித்தப்படி நிற்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News