உள்ளூர் செய்திகள் (District)

கோவை வாலிபரிடம் ரூ.48 லட்சம் மோசடி- திருப்பூர் தொழில் அதிபர் மீது வழக்கு

Published On 2024-09-25 15:07 GMT   |   Update On 2024-09-25 15:07 GMT
  • தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார்.
  • தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

கோவை:

கோவை வேடப்பட்டி அருகே உள்ள ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது28).

இவர் வாட்டர் டேங்க் சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு திருப்பூரை சேர்ந்த மார்சல் பிரிட்டோ என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தான் தொழில் அதிபராக இருப்பதாகவும், துபாயில் பிபிஓ அலுவலகம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் துபாயில் பிபிஓ அலுவலகம் திறந்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். எனவே நீங்கள் பணம் முதலீடு செய்தால் நாம் இருவரும் சேர்ந்து துபாயில் தொடங்கலாம். அதில் வரும் லாபத்தில் உங்களுக்கும் பங்கு தந்து விடுகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை பிரவீன்குமார் உண்மை என நம்பிவிட்டார். பின்னர் பிரவீன்குமார் அவரிடம் ரூ.48 லட்சம் பணத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து பிரவீன்குமாரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது தொழில் தொடங்கவில்லை. இதுகுறித்து மார்சல் பிரிட்டோவிடம் கேட்டதற்கு அவர், கொரோனா என்பதால் தொடங்கவில்லை என தெரிவித்து விட்டார்.

இதையடுத்து பிரவீன்குமார் அங்கிருந்து கோவைக்கு வந்தார். அதன்பிறகும் தொழில் தொடங்கவில்லை. இதனால் பிரவீன்குமாருக்கு மார்சல் பிரிட்டோ மீது சந்தேகம் ஏற்பட்டது.

தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பிரவீன்குமார் கேட்டார். அதனையும் அவர் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன்குமார் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், தொழில் தொடங்குவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருப்பூர் தொழில் அதிபர் மார்சல் பிரிட்டோ மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News