சளி சிகிச்சைக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்
- சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
- சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் :
கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக 13 வயது சிறுமி வந்துள்ளார். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டரிடம், சளி பிரச்சனை இருப்பதாக தந்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு ஊசி போடவும், மாத்திரையும் எழுதி சீட்டு கொடுத்துள்ளார்.
அந்த சீட்டை வாங்கிக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு வந்த தந்தையிடம் இருந்து மருந்து சீட்டை வாங்கிய செவிலியர் அதை படித்து கூட பார்க்காமல் 2 ஊசி போட்டுள்ளார். இதனை பார்த்த சிறுமியின் தந்தை, எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, எனது மகளுக்கு சளி பிரச்சனை தான் என்று கூறியுள்ளார். அதற்கு செவிலியர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பான செய்தி வெளியானது.
இந்நிலையில், சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர் கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.