டாக்டர் என ஏமாற்றி குமரி நர்சை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த வாலிபர்
- எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது.
- எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.
நாகர்கோவில்:
மயக்கும் பேச்சு, ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றால் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறும் பெண்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். அந்த வகையில் டாக்டர் என ஆசைவார்த்தை கூறியவரை நம்பி, 2 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் நர்சு ஒருவர். கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவர தற்போது தனது வாழ்க்கைக்கு வழி கேட்டு போலீசில் புகார் கொடுத்து கண்ணீருடன் நிற்கிறார் அவர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், திட்டுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு மதம் மாறி விட்டதால், சுன்னத் செய்ய வேண்டும் என ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் தான், நர்சை தன் வலையில் வீழ்த்தி தற்போது 2 குழந்தைகளுக்கு தாயாக்கி விட்டு, கைவிட்டுள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட நர்சு போலீசில் கூறியதாவது:-
சுன்னத் செய்வதற்காக வந்த வாலிபர், தான் ஒரு டாக்டர் என என்னிடம் அறிமுகமானார். சேலம் மாவட்டத்தில் கிளினீக் மற்றும் லேப் வைத்துள்ளதாக கூறிய அவர், இணையதளத்தில் அதன் விவரங்களை என்னிடம் காண்பித்தார். அதில் கிளினீக் படம் மற்றும் டாக்டர் என அவரது பெயர் போன்றவை இருந்தன.
தொடர்ந்து ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், எனது கிளினீக் மற்றும் லேப்பில் பணியாற்ற ஒரு நர்சு தேவை என்றும் நல்ல சம்பளம் தருகிறேன் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு அனாதை எனவும் மருத்துவராகி பணமும் மரியாதையும் கிடைத்தாலும் அன்பு காட்டுவதற்கு யாரும் இல்லை எனவும் நைசாக பேசினார்.
அவரது மோசடி வார்த்தைகளை நம்பிய என்னை காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் ஒரு மாதத்தில் சேலம் அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்தோம்.
ஆனால் சில நாட்களில் கணவர், மருத்துவர் இல்லை என்பதும் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் என்பதும் தெரிய வர நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.
இதுபற்றி கேட்டபோது, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தாக்கினார். இந்த நிலையில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் வேறு வழியின்றி அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தினேன்.
இதற்கிடையில் அவருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு அதிகமானது. 2 குழந்தைகளையும் என்னையும் அருமநல்லூர் அழைத்து வந்த கணவர், வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக தெரிவித்தார். அவர் திருந்தினால் சரி என்றேன்.
வெளிநாட்டு வேலைக்குச் செல்ல பணம் வேண்டும் என்று கேட்டார். இதனால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தேன். தொடர்ந்து வெளிநாடு சென்ற அவர் அங்கும் சரியாக வேலை பார்க்காமல் ஊர் திரும்பி விட்டார்.
இந்த நிலையில் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.
எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு என பலருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பூதப்பாண்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.