கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர் கைது
- நீலாம்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
- அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நீலாம்பூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.அப்போது ஆஸ்பத்திரியில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு வந்த கேரள இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியான அந்த பெண் கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.இதுகுறித்து இளம்பெண் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது.
அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நபரை தேடி வந்தனர். விசாரணையில், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பதும், டீ மாஸ்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.