உள்ளூர் செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்தில் கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

Published On 2022-12-29 09:28 GMT   |   Update On 2022-12-29 09:28 GMT
  • ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர் விழுந்து தத்தளித்து மாயமானார்.
  • மூழ்கி மாயமான பெருமாளின் உடல் இன்று கொட்டாயமேடு கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், இவருக்கு சொந்தமான படகில் அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன்,பெருமாள், சூரியமூர்த்தி ஆகியோருடன் கடந்த 27-ம் தேதி காலை கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.

நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர்.

இதனை அறிந்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் விபத்துக்குள்ளான பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலில் மூழ்கி மாயமான பெருமாளின் உடல் இன்று கொட்டாயமேடு கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது .

இதனை அறிந்த மீனவர்கள் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் உடலை கைப்பற்றி போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

படகு கவிழ்ந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்த பெருமாளுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News