பாளை வ.உ. சி. மைதானத்தில் தரமற்ற முறையில் கேலரி அமைத்த ஒப்பந்ததாரர்-அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்- மாநகராட்சி கமிஷனரிடம், அ.தி.மு.க.வினர் மனு
- தி.மு.க. ஆட்சி காலத்தில் வ. உ. சி. மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
- பணிகளை கண்காணிக்க தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் இன்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்தில் உள்ள வ. உ. சி. மைதானம் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும், பெரிய வர்கள் நடைபெற்று மேற்கொள்ளும் வகையிலும் பயன்பட்டு வந்தது. இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதன்படி ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கப் பட்டது.
இந்த மைதானம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் தரமற்ற முறையில் கட்டப்பட்டதன் விளைவாக நேற்று பலத்த காற்றுடன் அரை மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த மைதானத்தின் மேற்கூரை சேதம் அடைந்தது.
அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே தரமற்ற முறையில் மைதானத்தை அமைத்த ஒப்பந்ததாரர் மீதும், அதனை உரிய முறையில் கண்காணிக்க தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும் சேதமடைந்த பகுதி போக மீதமுள்ள கேலரிகளை நிபுணர்கள் கொண்டு உடனடியாக ஆய்வு செய்து அவற்றின் உறுதி தன்மையையும் பரிசோதிக்க வேண்டும். தற்போது சேதம் அடைந்த பொருட்களுக்கான தொகையை கணக்கிட்டு இந்த சம்பவத்திற்கு காரண மானவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அப்போது கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்து சின்னத்துரை, மேகை சக்தி குமார், மோகன், ஹயாத், கவுன்சிலர் சந்திரசேகர், மகபூப் ஜான், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், வட்டச் செயலாளர்கள் வன்னை கணேசன், பாறையடி மணி, நந்தகுமார், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் தாழை மீரான், வெள்ளப்பாண்டி, சம்சு சுல்தான், பக்கீர் மைதீன் வாஸ்து தளவாய், தங்க பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சேதம் அடைந்த கேலரிகளை நேரில் ஆய்வு செய்தேன். அதன் அருகில் உள்ள மற்ற கேலரிகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதன் தரத்தை ஆய்வு செய்ய சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லைக்கு வர உள்ளது.
அவர்கள் ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் துறை ரீதியிலான மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.