அய்யலூர் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி கிலோ ரூ.5க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
- தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
- பெரும்பாலானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிளவனூர், நடுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். அய்யலூரில் தக்காளிக்கென 5 மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன.
திருச்சி, கரூர், சேலம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் பெய்த மழையால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அவர்கள் வேதனையில் இருந்தனர். இந்த நிலையில் கொடி தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர். மேலும் பருவமழை கைகொடுத்த நிலையில் ஆர்வமாக தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர்.
இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. தற்போது 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5 ஆக சரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பெரும்பா லானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த கிட்டங்கியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.