உள்ளூர் செய்திகள்

ஓசூர் நர்சரி தோட்டங்களில் மலர் செடிகள் விற்பனை அமோகம்

Published On 2022-12-31 10:17 GMT   |   Update On 2022-12-31 10:17 GMT
  • நர்சரி தோட்டங்கள் அமைத்து மலர் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
  • கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இழப்பை தற்போது ஈடு செய்ய முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஓசூர்,

ஓசூர் அருகே பாகலூர், பேரிகை,மற்றும் அகலக்கோட்டை, பாலதோட்டனபள்ளி,, மரகததொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் நர்சரி தோட்டங்கள் அமைத்து மலர் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

இங்கு ரோஜா, நிராபல், சென்ட்ரோஸ், கில்லி எல்லோ, கிள்ளி ஆரஞ்சு, மேங்கோ எல்லோ, மூக்குத்தி ரோஸ், தாஜ்மஹால், நோப்ளஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்செடி நாற்றுகள், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு, மலர் செடி நாற்று ஏற்றுமதியில் நல்ல லாபம் பெற்று வந்த உற்பத்தியாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

ரோனா ஊரடங்குக்கு பின்னர், மலர் செடிகள் விற்பனை குறைந்து விவசாயிகள் கடும் நஷ்டங்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், இந்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களுக்காக மலர் செடி நாற்றுகளின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.

புத்தாண்டு பிறப்பு, பொங்கல், காதலர் தினம் ஆகிய விழாக்கள் அடுத்தடுத்து கொண்டா டப்படவுள்ளதால் இந்த பண்டிகைகளுக்காக வியாபாரிகள், மலர்ச்செடி நாற்றுகளை தங்கள் பகுதிகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். இதனால் அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள நர்சரி தோட்டங்களில் மலர் செடி நாற்றுகள் விற்பனை களை கட்டியுள்ளது.

இதனால், நர்சரி தொழிலில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அண்டை மாநிலமான கேரளாவில், மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட விழாக்களை சிறப்பாக கொண்டாடுவதால் கேரள வியாபாரிகள் நாள்தோறும் அகலக்கோட்டை கிராம பகுதிகளுக்கு வந்து அதிகளவில் மலர் செடி நாற்றுகளை கொள்முதல் செய்து செல்கின்றனர்.

இது தவிர காதலர் தின கொண்டாட்டத்தில் காதலர்கள் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள மலர்களை வழங்குவதற்கு பதிலாக, மலர் செடிகளை வழங்கி வருகின்றனர். இதனால் மலர் செடிகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. பண்டிகை கொண்டாட்டங்களுக்காக அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மலர் செடி நாற்றுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இழப்பை தற்போது ஈடு செய்ய முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News