உள்ளூர் செய்திகள்
எமரால்டு அணையில் நீர் மட்டம் குறைந்தது
- கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மழை குறைவாகவே பெய்தது.
- அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் 12 மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட ஏராளமான அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் 12 மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மஞ்சூர்அருகே உள்ள எமரால்டு அணை மூலம் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 150 மெகாவாட், பரளி மின்நிலையத்தில் 180 மெகாவாட் என மொத்தம் 390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவு 184 அடி. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மழை குறைவாகவே பெய்தது.
இதனால், எமரால்டு பகுதியை சுற்றி உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. சிற்றாறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. எனவே அணைக்கு நீர்வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணையில் உள்ள தண்ணீரின் இருப்பு பெருமளவு குறைந்து உள்ளது.