தட்டார்மடத்தில் வாரச்சந்தை மீண்டும் தொடக்கம்
- தட்டார்மடம் போலீஸ் நிலையம் அருகே முன்பு செயல்பட்ட இடத்தில் மீண்டும் வாரச்சந்தை தொடங்கப் பட்டது.
- வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டார்மடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை முறையாக செயல்பட்டு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். மேலும் அந்த வாரச்சந்தை செயல்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்ததால் அதனை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நேற்று கோழி மற்றும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. அவைகளை முறையாக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காய்கறி மற்றும் இதர கடைகள் வருகிற வாரம் செயல்படும் என தெரிவிக்கப் பட்டது. வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. கிளை செயலாளர் முரளி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கிருஷ்ண குமார், கோவில் தர்மகர்த்தா ஆதி லிங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சகாய் விஜயன், ஆடு வியாபாரிகள் கிருஷ்ணன், நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.