உள்ளூர் செய்திகள்

கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்கள்.

கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை; 5 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் கருகும் அபாயம்

Published On 2023-06-26 09:48 GMT   |   Update On 2023-06-26 09:48 GMT
  • மேட்டூர் அணை திறந்து 13 நாட்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை.
  • புதர் மண்டி கிடக்கின்ற பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் வேதபுரம் பகுதியில் கோரையாற்றில் இருந்து சாளுவனாறு பிரிகின்றது.

இந்த சாளுவனாற்று பாசனத்தை நம்பி மன்னார்குடி அருகே வேதபுரம், வெங்கத்தான்குடி, குறிச்சி மூளை, நெய்குன்னம், களப்பால், சோலைக்குளம், பட்டமுடையான் களப்பால், சீலத்தநல்லூர், மருதவனம், நடுவக்களப்பால், நாராயணபுரம் களப்பால், எழிலூர் பாண்டி, குன்னலூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன.

சுமார் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகளை அதிக அளவில் உள்ளடக்கிய விவசாயிகள் ஏராளமானோர் இந்த சாளுவனாற்றை நம்பி தான் பாசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சாளுவனாற்றின் பல கிராமங்களுக்கு தண்ணீர் வரவில்லை.

இருப்பினும் மேட்டூர் அணை 12-ம் தேதி திறக்கப்படுவது உறுதியான உடனேயே ஜூன் முதல் வாரத்தில் தங்களது வயல்களில் நேரடி தெளிப்பு செய்தனர்.

அதன் பிறகு ஓரிரு நாட்களில் பெய்த மழை காரணமாக தெளித்த நெற்பயிர்கள் முளைத்துவிட்டன.

தொடர்ந்து சாளுவனாற்று நீரை எதிர்பார்த்து இருந்த நிலையில் மேட்டூர் அணை திறந்து 13 நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் ஆற்றில் தண்ணீர் வரவில்லை.

இதனால் முளைத்த குறுவைப் பயிர்கள் கருகும் அபாயத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள் பலரும் அருகில் உள்ள குளங்களில் இருந்து மோட்டார் மூலம் குழாய்கள் போட்டு தண்ணீர் இரைத்து வருகின்றனர்.

எனவே தஞ்சையிலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வருகின்ற வெண்ணாற்றுக்கு கூடுதல் தண்ணீரை கேட்டு பெற்று, கோட்டூர் ஒன்றியம் கோரை ஆற்றில் கூடுதல் தண்ணீரை வழங்கி, சாளுவனாற்றில் பாசனத்துக்கு தண்ணீர் வரும்படி செய்திட வேண்டும். மேலும் சாளுவனாறு பாசனத்துக்கு மட்டுமின்றி வடிகாலாகவும் பல கிராமங்களுக்கு உள்ளதால் புதர் மண்டி கிடக்கின்ற பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News