சித்தூரில் கடத்திய ஆந்திர போலீஸ் ஜீப் வந்தவாசியில் சிக்கியது
- வாலிபரை மடக்கி பிடித்தனர்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
ஆந்திர மாநிலம் சித்தூரில் நேற்று பகல் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் போலீஸ் ஜீப்பை திருடிக் கொண்டு தமிழ்நாடு வேலூர் மாவட்டம் வழியாக சென்றுவிட்டார்.
பின்னர் ஜீப் திருவண்ணாமலை மாவட்டம் வழியாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இது குறித்து ஆந்திரா போலீசார் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை சாவடிகளிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு ஜீப்பை தேடினர். இந்த நிலையில் நேற்று மாலை வந்தவாசி பஜார் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் போலீசாருக்கு சொந்தமான ஜீப்பை வாலிபர் ஒருவர் வேகமாக ஓட்டி வந்தார்.
பஜார் வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் ஜீப் வேகமாக செல்ல முடியாமல் நின்றது.
இதனை பின்தொடர்ந்து வந்தவாசி டி.எஸ்.பி. கார்த்திக் சினிமா பாணியில் வேகமாக ஓடி வந்து ஆந்திர போலீஸ் ஜீப்பை கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரிடம் இருந்து ஜீப் பறிமுதல் செய்யப்பட்டு அவரை வந்தவாசி தெற்கு போலீசில் ஒப்படைத்தார்.
அந்த வாலிபரிடம் டிஎஸ்பி கார்த்திக் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் ஜீப்பை கடத்தியவர் சித்தூர் பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 24) என தெரிய வந்தது. தொடர்ந்து வாலிபரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதையடுத்து வந்தவாசி போலீசார் சித்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சித்தூர் போலீசாரிடம் ஜீப்பையும், சூர்யாவையும் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.