உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா-24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-04-21 08:41 GMT   |   Update On 2023-04-21 08:41 GMT
  • பாகம்பிரியா உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும்.
  • மே 3-ந்தேதி தேரோட்டம் நடைபெறும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி திருமந்திரநகரில் பழமையான சிவன் கோவிலான பாகம்பிரியா உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் 24-ந் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தினசரி சுவாமி, அம்பாள் சப்பர வீதிஉலா நடைபெறும். 7-ந் திருநாளான வருகிற 30-ந்தேதி சாமி, அம்பாள் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சப்பர வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 8-ம் திருநாளன்று பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். மே 3-ந்தேதி தேரோட்டம் நடைபெறும்.

முதலில் மகாகணபதி, முருகப்பெருமானும் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும், பின்னர் சுவாமி சங்கர ராமேஸ்வர பாகம் பெரிய அம்பாளுடன் பெரிய எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தேரோட்டத்தின் போது பாண்டிச்சேரி, விருதாச்சலம், கரூர் பகுதி சிவ தொண்டர்களின் சிவகைலாய சிவபூதன வாத்தியங்கள், தேவார இன்னிசை வேதபாராயணம் நடைபெறும். அது மட்டுமன்றி யானை, ஆடு, குதிரை, களியல் ஆட்டம், மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், அணி வகுப்புகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை நடைபெறும். தேரோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது விழா கமிட்டியாளர்கள் கோட்டுராஜா, கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், செந்தில், சோமநாதன், சாந்தி, முத்து, மந்திரமூர்த்தி, சண்முகம் பட்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News