உள்ளூர் செய்திகள்

பலியான ஆடுகள்.

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

Published On 2023-12-04 06:54 GMT   |   Update On 2023-12-04 06:54 GMT
  • வாணியம்பாடி அருகே மீண்டும் அட்டகாசம்
  • வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதனாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி வீட்டில் வளர்த்து வந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது.

தகவலறிந்து வந்த வாணியம்பாடி வனத்துறை யினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட தோடு, மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்டு பிடிக்க, அந்த கிராமத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

மேலும் வனத்துறையினர் மர்ம விலங்கை பிடிக்க கூண்டுகள் வைத்து முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மதனாஞ்சேரி அடுத்த தும்பேரி கிராமத்தில் மர்ம விலங்கு புகுந்தது. அங்கு சம்பத், சின்னகண்ணன், தீர்த்தமலை ஆகியோருக்கு சொந்தமான 6 ஆடுகளை கடித்து குதறியது. அனைத்தும் சம்பவ இடத்திலேயே பலியானது.

தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்களிடம் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்க முயற்சி செய்யும் வனத்துறையினர் விலங்குகளிடம் இருந்து பொது மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும். இனியும் காலம் கடத்தாமல் ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு எது என்பதை கண்டறிந்து அதனை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மர்ம விலங்கு வேட்டையால் ஆடுகள் தொடர்ந்து பலியான சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News