உள்ளூர் செய்திகள் (District)

வாணியம்பாடியில் மாணவிகள் தர்ணா

Published On 2022-11-14 10:02 GMT   |   Update On 2022-11-14 10:02 GMT
  • பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் தங்கள் பள்ளியில் பணியமர்த்த வலியுறுத்தல்
  • போலீசார் பேச்சுவார்த்தை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த வேலவன் என்பவர் கடந்த ஒரு வாரகாலத்திற்கு முன் பணிமாறுதல் பெற்று திருப்பத்தூரில் உள்ள அரசு மார்டன் பள்ளிக்கு சென்றார்.

இந்த நிலையில் மீண்டும் இயற்பியல் ஆசிரியர் வேலவன் தங்கள் பள்ளியிற்கே வர வேண்டும் என தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி 11, 12-ம் வகுப்பு மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி நுழைவு வாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் அம்பலூர் போலீசார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் வேலவனை மீண்டும் தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அதிகாரிகள் வரவழைத்த பின்னர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News