நொய்யல் ஆற்றின் கரையோரம் சாலைப்பணிகள் தீவிரம்
- மின் மயான ரோட்டில் ரோடு போடும் பணி தாமதமான நிலையில் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடையூறு குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
- போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட குழிகள் சமன் செய்யப்பட்டு, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நொய்யல் ஆற்றின் கரையை ஒட்டி, மின் மயானம் வழியாகச் செல்லும் ரோடு புதிதாக அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக மிகவும் மந்த கதியில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் அமைச்சர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் மேயர் தினேஷ்குமார், பணிகள் தாமதம் குறித்து கடுமையாக பேசினார். இதனால் பணிகள் நிலை குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்ய அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்பேரில் கலெக்டர், கமிஷனர், மேயர் ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பணிகள் நிலை குறித்து கேட்டறிந்தனர்.
உரிய காரணம் இன்றி தாமதமாகும் பணிகள், சிறு தடைகள் காரணமாக தொடரப்படாமல் கிடப்பில் போட்டுள்ள பணிகள் குறித்தும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. மின் மயான ரோட்டில் ரோடு போடும் பணி தாமதமான நிலையில் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடையூறு குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இதனால், கடந்த 2 நாளில் அப்பகுதியில் பணிகள் முடுக்கி விடப்பட்டது. திறந்து கிடந்த பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகள் சரி செய்யப்பட்டு, ரோடு அமைக்க மெட்டல் கொட்டி நிரப்பப்பட்டது. யுனிவர்சல் ரோடு சந்திப்பு, வளம் பாலம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட குழிகள் சமன் செய்யப்பட்டு, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.