திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
- விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கினால் உயிரிழப்புக்களைத் தடுக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வுப் பிரசார தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பிரசாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றுடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கக்கூடாது என்பதாகும். தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கினால் உயிரிழப்புக்களைத் தடுக்கலாம். ஆகவே, பெற்றோா் தங்களது பிள்ளைகளை தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என்றாா்.
இதைத் தொடா்ந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த குறும்படம் மற்றும் சுவரொட்டிகளை வெளியிட்டதுடன், மாணவா்களுக்கு தலைக்கவசங்களையும் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அமுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.