உள்ளூர் செய்திகள் (District)

கொய்யா, முருங்கை சாகுபடிக்கு மானியம் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

Published On 2022-12-06 04:53 GMT   |   Update On 2022-12-06 04:53 GMT
  • ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும்.
  • மடத்துக்குளம் வட்டாரம் சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளன.

மடத்துக்குளம் : 

கொய்யா சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது :- கொய்யாவின் தேவை அதிகரித்து வருவதால் தோட்டக்கலை துறை சார்பில் கொய்யா சாகுபடிக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.

கொய்யாவில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும், உயிர்ச்சத்துக்களும், விதையில் இரும்புச்சத்தும், இலைச்சாறு, வலி மருந்தாகவும், வயிற்றுப் புண் ஆறவும் பயன்படுகிறது. அனைத்து மண் வகையிலும் வளர்ந்தாலும் வடிகால் வசதி மிக முக்கியம்.அவரை வகைப்பயிர்கள் மற்றும் குறைந்த வயதுடைய காய்கறி பயிர்களை கொய்யா காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.

பூக்கள் பூக்கும் காலத்திலிருந்து ஐந்து மாதங்கள் கழித்து கனிகளை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டருக்கு ஒரு ஆண்டுக்கு 25 டன் வரை மகசூல் கிடைக்கும்.மடத்துக்குளம் வட்டாரத்தில் கொய்யா சாகுபடிக்கு கொய்யா பதியன்கள், ஒரு எக்டருக்கு 555 செடிகள் மற்றும் இடு பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது, இதற்காக ஒரு ஹெக்டருக்கு ரூ.17ஆயிரத்து 600 மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

முருங்கைக்காய் மரங்களில் வளராமல் செடிகளில் வளர்வது செடி முருங்கையாகும். இந்த செடி முறை நான்கு அல்லது ஐந்து மாதங்களில் காய்க்க தொடங்குவதால், விரைவில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.அதே போல் ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் காய்க்க விவசாயிகளுக்கு பயன்தரும் விவசாயமாகும். 5 மாதத்தில் மகசூல் கொடுக்க துவங்குவதால் அதிக வருவாய் கிடைக்கும்.அதே போல் ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை மகசூல் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் இந்த செடி முருங்கையை முறையாக சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

செடிகள் மூன்றடி உயரம் வளர்ந்த பிறகு மாதம் ஒரு முறை அல்லது தேவைப்படும்போது களை எடுக்க வேண்டும்.தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் போது ஊடுபயிராக தக்காளி வெண்டை போன்ற குறுகிய கால பயிர்களை பயிர் செய்யலாம். விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஏக்கருக்கு 20 முதல் 25 டன் முருங்கை மகசூல் கிடைக்கும்.மடத்துக்குளம் வட்டாரம் சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளன.

கொய்யா, முருங்கை நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு துங்காவி உள்வட்ட விவசாயிகள் தாமோதரன் 96598 38787, மடத்துக்குளம் உள்வட்ட விவசாயிகள் நித்யராஜ் 84890 95995 ஆகியோரை மேற்குறிப்பிட்ட செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Tags:    

Similar News