உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கரைப்புதூர் ஊராட்சியில் துணிப்பை வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

Published On 2023-02-11 07:21 GMT   |   Update On 2023-02-11 07:21 GMT
  • முதற்கட்டமாக 2000 வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.
  • கடைகள், பேக்கரிகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைகள், பேக்கரிகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு தோறும் துணிப்பைகள் வழங்கும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.

இதன்படி முதற்கட்டமாக 2000 வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், கரைப்புதூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளுக்கு துணி பைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கரைப்புதூர் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் ஊராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  

Tags:    

Similar News