வரிகளை செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
- திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன.
- நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றன. இவை தவிர மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏலம், குத்தகை அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது. காலியிட வரியில் ரூ. 7.97 கோடி, தொழில் வரி ரூ.3.30 கோடி,குடிநீர் கட்டணம்ரூ. 18.81 கோடி, குத்தகை இனத்தில் ரூ. 15.05 கோடி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ. 13.61 கோடி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 1.81 கோடி நிலுவை உள்ளது. மொத்தம் 143.89 கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவையில் உள்ளது. பல கோடி ரூபாய் வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள்,குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, அலுவலக பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், ரோடுகள் பராமரிப்பு, கடன்களுக்கான வட்டி, தவணை செலுத்துதல் என மாநகராட்சி நிர்வாகம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டுள்ளது.
எனவே மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி சீரான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், வரி வசூல் மையங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை5 மணி வரை செலுத்தலாம். மேலும் ஆன்லைன் வாயிலாகhttps://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.