உள்ளூர் செய்திகள்

கமிஷனர் அப்துல்ஹாரிஸை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

திருமுருகன்பூண்டி நகா்மன்ற கூட்டத்தில் தூய்மைப்பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானம் ஒத்திவைப்பு

Published On 2023-04-19 05:31 GMT   |   Update On 2023-04-19 05:31 GMT
  • 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
  • 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவினாசி :

திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.

17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News