வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ., - கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக உறுதி
- தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.
- மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 52 வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனை தற்போது ஓரளவு சீர்செய்யப்பட்டிருப்பதாகவும் அதே போல் சாக்கடையை அடிக்கடி தூர்வார வேண்டும் எனவும் தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மேலும் முதியோர் உதவித் தொகை , மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என ஏராளமான பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.
பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பணிவுடன் கேட்டு அறிந்த எம்.எல்.ஏ., உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு சென்று அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.